திருச்சிற்றம்பலம் அருகே தலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

திருச்சிற்றம்பலம் அருகே தலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-07-13 22:45 GMT
திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே நரியங்காடு கிராமத்தில் ஏழுமுக காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே சாலையோரத்தில் தலை எரிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை ஆண் பிணம் ஒன்று கிடந்தது. பிணமாக கிடந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

பிணம் கிடந்த இடத்தின் அருகே உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் ரத்தக்கறை களுடன் கிடந்த ஆடைகள் மற்றும் போர்வையை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதனுடன் ஒரு குழந்தையின் கால் சட்டையும், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையின் முகவரியுடன் துணிப்பையும் கிடந்தது. பிணமாக கிடந்த நபரின் முகம் முழுவதுமாக தீயில் கருகி விட்டதால், அவரை போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை.

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி ஆகியோர் பிணம் கிடந்த இடத்தை பார்வையிட்டனர். தஞ்சை தடயவியல் உதவி இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் குழுவினர் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. பிணம் கிடந்த இடத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் அண்ணா நகர் வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்ற நாய், அங்கேயே நின்று விட்டது.

இதுகுறித்து திருச்சிற்றம்பலம் கிழக்கு கிராம நிர்வாக அதிகாரி தனசேகர் திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? எதற்காக கொலை நடந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்