திண்டுக்கல் ரெயில் நிலையத்தை கண்காணிக்காத கேமராக்கள் - குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அவலம்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்ட கேமராக்கள் செயல்படாமல் உள்ளன. இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அவல நிலை உள்ளது.

Update: 2019-07-14 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில் நிலையம் வழியாக சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினசரி சென்று வருகின்றன. இவற்றில் குறைந்தபட்சம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வார்கள். மேலும் பழனி, வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து வெளியூர்களுக்கு ரெயிலில் செல்கின்றனர்.

இதனால் திண்டுக்கல் ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்புக்காக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ரெயில் நிலையம், டிக்கெட் முன்பதிவு செய்யும் இடம், பயணிகள் காத்திருக்கும் அறை மற்றும் நடைமேடைகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இந்த நிலையில் தற்போது இந்த கேமராக்களில் 4 மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு கேமரா, 2-வது நடைமேடையில் உள்ள 2 கேமராக்கள் மற்றும் 3-வது நடைமேடையில் உள்ள ஒரு கேமரா மட்டுமே செயல்படுகிறது. மற்ற கேமராக்கள் அனைத்தும் காட்சிப்பொருளாகவே தற்போது வரை உள்ளன. இதனை வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் இருந்து நகைகள், பணத்தை திருடிச்செல்கின்றனர்.

கண்காணிப்பு கேமரா செயல்படாததால் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் ரெயில்வே போலீசாரும் திணறுகின்றனர். இதன் காரணமாக ரெயில் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே ரெயில் நிலையத்தில் செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்