இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளோம் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Update: 2019-07-14 23:00 GMT
நாகர்கோவில்,

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் அதிகமான மாணவர்களை சேர்க்க புதிய திட்டத்தை கொண்டு வர இருக்கிறோம். 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு பள்ளிகளிலேயே மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் நிலையை மாற்றி ஏறக்குறைய 60 ஆயிரம் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 744 பள்ளிகள் அனுமதி இல்லாமல் இயங்கி வந்ததை கண்டுபிடித்தோம். அந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் கிடைக்கப்பெற்றவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இருமொழி கொள்கை

2013, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஏறக்குறைய 82 ஆயிரம் பேர் உள்ளனர். தற்போது 16,700 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். அதாவது மாணவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு தான் இந்த ஆண்டு அதிகப்படியான மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்காலிகமாக எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதோ அங்கு ஆசிரியர்களை நிரப்ப அரசு விரைவில் ஆணையிட இருக்கிறது. காலி பணியிடம் இருக்குமானால் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். அதற்கான நிதியை அரசே வழங்கும். மகப்பேறுக்கு செல்லும் ஆசிரியர்களின் இடத்தை தற்காலிகமாக நிரப்ப அரசு ஆணையிட உள்ளது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, மாநில அரசின் உரிமையை பறிப்பதாக இல்லை. மாநில அரசை பொறுத்த வரையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கை என்பதில் உறுதியாக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்