ரூ.45 லட்சம் உரம் மோசடி வழக்கு: மேலும் 2 பேர் கைது

ரூ.45 லட்சம் உரம் மோசடி வழக்கில் மேலும் 2 பேரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.

Update: 2019-07-14 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). நில புரோக்கர். இவருக்கும், கோவையை சேர்ந்த ஆத்மா சிவக்குமார் (49) என்பவருக்கும் இடையே நிலம் வாங்கி, கொடுத்ததில் பழக்கம் இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து ஆத்மா சிவக்குமார் உள்பட 6 பேர், சிவக்குமாரிடம் தாங்கள் 10,800 டன் வெளிநாட்டு உரத்தை ஏலம் எடுத்து இருப்பதாகவும், அந்த உரத்தை இந்தோனேசியாவுக்கு அனுப்ப ஏற்றுமதி ஆர்டர் கிடைத்து இருப்பதாகவும், இத்தொழிலில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தை கூறி உள்ளனர். இதை நம்பி சிவக்குமார், அவர்களிடம் ரூ.45 லட்சம் கொடுத்து உள்ளார்.

ஆனால் அவர்கள் லாபத்தில் பங்கு கொடுக்காமலும், வரவு-செலவு கணக்கு காண்பிக்காமலும் இருந்து வந்தனர். எனவே சந்தேகம் அடைந்த சிவக்குமார் இது தொடர்பாக விசாரித்து உள்ளார். அப்போது உர டெண்டர் ரத்தாகி இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே ஆத்மா சிவக்குமார் உள்ளிட்ட 6 பேரும் தன்னிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்து விட்டதாக சிவக் குமார் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் ஆத்மா சிவக் குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதன்பின்னர் தற்போது இந்த வழக்கில் கோவை கவுண்டம்பாளையம் ஹரிஹரன் (46), திருச்செங்கோடு கே.எஸ்.நகர் ராமேஷ்வரன் (42) ஆகியோரை கைது செய்து உள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் வடமதுரை மணிகண்டன் (40), கவுண்டம்பாளையம் ஜெயகிருஷ்ணன் (52), செந்தில் (50) ஆகியோரை போலீசாரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்