ஓய்வு பெற்ற அரசு அலுவலர் வீட்டில் 5 பவுன் நகை-பணம் திருட்டு போலீசார் விசாரணை

திருத்துறைப்பூண்டி அருகே ஓய்வுபெற்ற அரசு அலுவலர் வீட்டில் 5 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-14 22:15 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி அத்திமடை மெயின்ரோட்டை சேர்ந்தவர் அசோகன் (வயது 65). நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு மன்னார்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமராவில் ஆய்வு

இதுகுறித்து அசோகன் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அசோகன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய காட்சி பதிவாகியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்