தொப்பூரில் நிலத்தகராறில் முன்னாள் ராணுவ வீரர் வெட்டிக்கொலை தம்பி கைது

தொப்பூரில் நிலத்தகராறில் முன்னாள் ராணுவ வீரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-15 22:45 GMT
நல்லம்பள்ளி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தர்கா பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 45) முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஈஸ்வரனின் தம்பி பழனி (40). லாரி டிரைவர். இவர்களுக்கு நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று அவர்களுக்கு இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பழனி அரிவாளால் அண்ணன் ஈஸ்வரனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கணவரை வெட்டுவதை தடுக்க வந்த சரண்யாவுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர். நிலத்தகராறில் அண்ணனை தம்பி அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்