இறந்து கிடந்த தாத்தாவிடம் நகைகளை திருடியதாக ஆத்திரம்: இரும்பு கம்பியால் தாக்கி கொத்தனார் கொலை சிறுவன் கைது

இறந்து கிடந்த தாத்தாவின் நகைகளை திருடியதாக கருதி கொத்தனாரை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-15 22:45 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் எழில் நகரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 42). கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 17 வயது சிறுவன், இரும்பு கம்பியால் நாகராஜின் தலையில் தாக்கிவிட்டு தப்பிஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் கொலை வழக்காக பதிவு செய்து, நாகராஜை அடித்துக்கொன்ற சிறுவன் யார்? என விசாரணை நடத்தினார்.

அதில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த செல்லபாண்டி என்பவர் குடிபோதையில் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவை மாயமாகி இருந்தது.

செல்லபாண்டியனும், கொலையான நாகராஜூம் நண்பர்கள். அவரால்தான் செல்லபாண்டியும் குடிபழக்கத்துக்கு அடிமையாகி இறந்ததாகவும், அவரது நகைகளை நாகராஜ்தான் திருடி இருப்பார் எனவும் சந்தேகம் அடைந்த செல்லபாண்டியின் குடும்பத்தினர், இதுபற்றி நாகராஜிடம் கேட்டனர்.

ஆனால் நாகராஜ், தனக்கும் இறந்து கிடந்த செல்லபாண்டி அணிந்து இருந்த நகைகள் மாயமானதற்கும் தொடர்பு இல்லை என்று கூறிவிட்டார்.

ஆனால் செல்லபாண்டியின் 17 வயது பேரன், தனது தாத்தா அணிந்து இருந்த நகைகளை நாகராஜ்தான் திருடி இருப்பார் என நினைத்து அவரிடம் மீண்டும் கேட்டார். ஆனால் நகையை தான் எடுக்கவில்லை என்று நாகராஜ் உறுதியாக கூறிவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்லபாண்டியின் பேரன், இரும்பு கம்பியால் தாக்கி நாகராஜை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து வேளச்சேரியில் பதுங்கி இருந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்