பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கீழ்வேளூரில் நடந்தது

பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கீழ்வேளூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-16 22:30 GMT
கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் அகரகடம்பனூர், வடக்குவெளி, புத்தர்மங்கலம், எரவாஞ்சேரி, ஆணைமங்கலம், ஓர்குடி, கோகூர், வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2017-18-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகைக்கான பிரீமியம் செலுத்தி இருந்தனர். ஆனால், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் காப்பீட்டு தொகை வழங்கியுள்ளதாகவும், இதில் 1,092 விவசாயிகள் விடுபட்டு இருப்பதாகவும், அனைவருக் கும் காப்பிட்டு தொகை வழங்க வலியுறுத்தி கடந்த மாதம் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கீழ்வேளூரில் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் விடுபட்ட அனைவருக்கும் ஜூலை மாதம் 15-ந் தேதி, காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்து இருந்தனர்.

இந்த நிலையில் விவசாயிகள் காப்பீட்டு தொகை பெற கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் சரிவர பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வீரமுரசு, செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் கவுதமன், துணை தலைவர் காமராஜ் ஆகியோர் தலைமையில் தாசில்தார் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (புதன்கிழமைக்குள்) காப்பீட்டு தொகை வழங்காவிட்டால் சாலை மறியல் நடத்துவோம் என்று அறிவித்தனர்.

மேலும் செய்திகள்