குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-16 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிரே ஆலங்குளம் ஹவுசிங் போர்டு பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள அரசு வாடகை குடியிருப்பில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த கிணற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நாய் இறந்து கிடந்தது. நாய் இறந்து 4 நாட்கள் ஆகியும், இறந்த நாயின் உடல் கிணற்றில் இருந்து அகற்றப் படாமல் இருந்தது.

இந்நிலையில் சிலர் வந்து கிணற்றில் உள்ள நாயின் உடலை அகற்றிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நாய் இறந்து கிடந்த கிணற்றை சுத்தம் செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள சிறிய குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சாலை மறியல்

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்கக்கோரியும், நாய் இறந்து கிடந்த கிணற்றை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள சிறிய குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனக்கூறி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்