சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் இறந்ததை தொடர்ந்து மங்கலம் அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடமே தொழிலாளி கொடுத்து உள்ளார்.

Update: 2019-07-16 22:00 GMT
மங்கலம்,

திருப்பூர் மாவட்டம், மங்கலம் அருகே இடுவாய்-சின்னக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ்(வயது 70). இவருடைய மனைவி ராசாத்தி(65). இவர்களுக்கு செல்வி(என்கிற) அம்பிகா(42), சாந்தி(37) ஆகிய 2 மகள்களும், கோபாலகிரு‌‌ஷ்ணன்(39) என்ற மகனும் இருந்தனர். ராசாத்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செல்விக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவருடன் விவாகரத்து பெற்று விட்டார். பின்னர் அவர் தனது மகன் ரகுநாதனுடன்(22) தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

சாந்தி திருமணம் ஆகி அதே ஊரில் கணவருடன் வசித்து வருகிறார். கோபாலகிரு‌‌ஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். துரைராஜ், தனது மகள், பேரன், மகன் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுநாதன் ஒருதலைக்காதலால் விரக்தி அடைந்து தாத்தா துரைராஜ் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரன் இறந்ததை தொடர்ந்து துரைராஜ் மிகுந்த கவலையுடன் காணப்பட்டார். மகனை பறிக்கொடுத்த செல்வியும், மருமகன் இறந்து விட்டானே என கோபாலகிரு‌‌ஷ்ணனும் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த னர். நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் தங்கள் வீட்டு கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டனர். அதன்பிறகு வீட்டின் விட்டத்தில் நைலான் கயிற்றால் 3 பேரும் தூக்கில் தொங்கினர். அப்போது ஏற்பட்ட சத்தத்தில் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். 3 பேரும் கயிற்றில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் துரைராஜ், கோபாலகிரு‌‌ஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உயிருக்கு போராடிய செல்வியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அதிகாலை 1 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது தந்தை, அண்ணன், அக்காள் ஆகிய 3 பேரையும் பறி கொடுத்து விட்டேனே என சாந்தி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

சம்பவம் நடந்த அன்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன் காலையில் வீட்டில் இருந்து கோபாலகிரு‌‌ஷ்ணன் இடுவாய் பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்று இருக்கிறார். அங்கு தங்கையிடம், வீட்டு பத்திரம் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்து உள்ளார். வீட்டு பத்திரமும், ரொக்க பணமும் இப்போது ஏன் தருகிறாய்? என்று தங்கை சாந்தி கேட்டு இருக்கிறார். அப்போது கோபாலகிரு‌‌ஷ்ணன், இந்த பணம் உனக்கு க‌‌ஷ்ட காலத்தில் கை கொடுக்கும் என்று கூறி இருக்கிறார். அண்ணன் பணம் கொடுக்கிறாரே. அதை வாங்கா விட்டால் நல்லதாக இருக்காதே என்று நினைத்து தன் அண்ணன் கொடுத்த பணம், வீட்டு பத்திரத்தை வாங்கி விட்டதாகவும், அவர் கொடுத்த பணம் இப்படி 3 பேரும் தற்கொலை செய்து கொள்வார்கள். அதன் பிறகு நடைபெறும் இறுதி சடங்குக்கு பயன்படும் என்று நான் கருதவில்லை. தன்னுடைய இறுதி சடங்குக்கு கூட முன் கூட்டியே என்னிடம் அண்ணன் பணம் கொடுத்து விட்டாரே என சாந்தி கூறி கதறி அழுதது அங்கு கூடி இருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்