சென்னை விமான நிலையத்தில் ரூ.54¾ லட்சம் தங்கம் பறிமுதல்; ரூ.12½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் ரூ.54 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக இலங்கை பெண்ணை கைது செய்தனர். மேலும் 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர். ரூ.12½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது.

Update: 2019-07-17 22:15 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த ரகமத்துல்லா கமீமா(வயது 46) என்ற பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவரது உடைமைகளில் எதுவும் இல்லாததால், அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 690 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பாசில்(40), நாகப்பட்டினத்தை சேர்ந்த அக்பர் அலி(41) ஆகியோரிடம் நடத்திய சோதனையில், இருவரிடம் இருந்தும் ரூ.30 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 841 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இதையடுத்து 3 பேரிடம் இருந்தும் ரூ.54 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 531 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இலங்கை பெண் ரகமத்துல்லா கமீமாவை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மற்ற 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்ல வந்த நாகூரை சேர்ந்த இனாயத்துல்லா(41) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் சவுதி ரியால் மற்றும் துபாய் திர்ஹம்ஸ் ஆகியவை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள ரியால், திர்ஹம்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அது ஹவாலா பணமா? என பிடிபட்ட இனாயத்துல்லாவிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்