ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பாத்திரத்தில் மறைத்து கடத்தி வந்த 101 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பாத்திரத்தில் மறைத்து கடத்தி வந்த 101 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததில் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-18 22:00 GMT
சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை சென்டிரல் ரெயில் நிலையம் முழுவதும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது தான்பாத்தில் இருந்து ஆலப்புழாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரெயிலில் சந்தேகத்துக்கிடமாக 3 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் கொண்டுவந்த பாத்திரங்கள் அடங்கிய மூட்டைகளை சோதனை செய்தனர்.

அந்த பாத்திரங்களுக்குள் 101 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 33), காளியம்மாள் (60), மன்னியனூர் பகுதியை சேர்ந்த ஜெயா (55) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பாத்திரங்களில் மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 101 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்