ஈரோட்டில் தாழ்வாக செல்லும் மின் கம்பியில் பட்டு மாணவியின் கைவிரல்கள் கருகின

ஈரோட்டில், தாழ்வாக செல்லும் மின் கம்பியில் பட்டு மாணவியின் கைவிரல்கள் கருகியது.

Update: 2019-07-18 21:45 GMT
ஈரோடு,

ஈரோடு மாமரத்துப்பாளையம் கணபதிநகர் பகுதியில் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கிறது. இந்த கம்பிகள் கடந்த ஒரு மாதமாக மிகவும் தாழ்வாக செல்கிறது. கன்னிமார் நகர் பகுதியில் இருந்து கணபதி நகருக்கு, சாலை வழியாக செல்வதைவிட விவசாய நிலங்கள் வழியாக நடந்து சென்றால் விரைவாக சென்று விடலாம். அதனால் பொதுமக்கள் அந்த வழியை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விவசாய நிலம் வழியாக அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் பெரியசாமி மகள் ஜோதிமணி (வயது 16) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை உயர் அழுத்த மின் கம்பியில் பட்டது. உடனே அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் ஜோதிமணியின் கை விரல்கள் கருகியது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பியை சரி செய்யக்கோரி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின் கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால் நாங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கூட விடுவதில்லை.

தற்போது மாணவியின் கை விரல்கள் மின்சாரம் தாக்கி கருகி உள்ளது. இதனால் உயிர் இழப்பு ஏற்படக்கூட அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை உடனடியாக சரிசெய்ய மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்