இந்தியாவில் பற்றாக்குறையாக இருக்கும்போது அரசு டாக்டர்களை வெளிநாடுகளில் பணியாற்ற அனுமதிக்கலாமா? கொள்கை முடிவு எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றுவதை தடுக்கும் வகையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-07-19 23:30 GMT

மதுரை,

மதுரையைச் சேர்ந்த அலெக்சாண்டர் தேவராஜ், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

எனது மனைவி லில்லிமனோகரன் கடந்த 1973–ம் ஆண்டில் அரசு டாக்டராக பணியில் சேர்ந்தார். அவர் வெளிநாட்டில் சென்று மருத்துவ சேவை புரிய 1992–ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. அதன்படி அவர் துபாய்க்கு சென்று பணியாற்றினார். 1996–ம் ஆண்டு வரை அவர் வெளிநாட்டில் பணியாற்றும் காலம் நீட்டிக்கப்பட்டது. அங்கு பணியாற்றியபோது இருதய நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் அங்கேயே சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து அவர் இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து 2002–ம் ஆண்டில் மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன், எனது மனைவி மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டு, உரிய விளக்கம் அளிக்கும்படி மெமோ அனுப்பி இருந்தார்.

இந்த மெமோ அடிப்படையில் 2004–ம் ஆண்டில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு உரிய பணப்பலன்கள், ஓய்வூதியம் மறுக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, எனது மனைவிக்கு சேர வேண்டிய பணப்பலன்கள், ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மனுதாரர் மனைவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்தியாவில் டாக்டர்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. அப்படி இருக்கும்போது அரசு டாக்டர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதை தவிர்ப்பது நல்லது. எனவே இதுதொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்