புனே அருகே கார்- லாரி பயங்கர மோதல்: கல்லூரி மாணவர்கள் 9 பேர் பலி

புனே அருகே தறிகெட்டு ஓடிய கார்-லாரி பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சுற்றுலா சென்று காரில் திரும்பிய கல்லூரி மாணவர்கள் 9 பேர் பலியானார்கள்.

Update: 2019-07-21 00:00 GMT
புனே,

புனே அருகே உள்ள யாவத் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 9 பேர் நேற்று முன்தினம் ராய்காட் மாவட்டத்துக்கு ஒரே காரில் சுற்றுலா சென்றனர்.

இவர்கள் ராய்காட்டை சுற்றிபார்த்துவிட்டு இரவு புனேக்கு புறப்பட்டனர். இதில் கார் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புனேயை நெருங்கி கொண்டு இருந்தது. புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கதம்வாக் வாஸ்தி பகுதியில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் மைய தடுப்பு சுவரில் மோதியது.

எனினும் நிற்காமல் ஓடிய கார் எதிர்புற சாலைக்கு சென்றது. அப்போது காரும், எதிரே வந்த லாரியும் பயங்கரமாக மோதி கொண்டன. இந்த கோர விபத்தில் கார் உருக்குலைந்தது. மேலும் காரில் இருந்த 9 பேரும் உடல் சிதைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காரில் சிதைந்த நிலையில், அடையாளம் காண முடியாதவாறு கிடந்த 9 பேரை அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 9 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டதாக கூறினர். பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்தில் பலியானவர்கள் அக்சய் பாரத், விஷால் சுபாஸ் (20), நிக்கில் சந்திரகாந்த் (20), சோனு என்ற நூர் முகமது (21), பர்வீஸ், சுபம் ராம்தாஸ் (19), அக்சய் திகே (20), தத்தா கணேஷ் (20), சுபேர் (21) என்பது தெரியவந்தது.

போலீசார் நடத்திய முதல் கட்டவிசாரணையில் கார் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய கார் அதிவேகமாக சென்றதாக விபத்து நடந்த பகுதி அருகில் இருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்ததாக லோனி கல்போர் போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் சுரஜ் பந்கர் கூறினார்.

இந்தநிலையில் கல்லூரி மாணவர்கள் பலியான தகவல் அறிந்து யாவத் பகுதி மக்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதில் பலியானவர்களின் உறவினர்கள், அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களை கண் கலங்க வைத்தது.

கார் விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் புனேயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று யாவத் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்