முத்தோரை பஜாரில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

முத்தோரை பஜாரில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2019-07-20 22:45 GMT
மஞ்சூர்,

ஊட்டி-மஞ்சூர் சாலையில் முத்தோரை பஜார் உள்ளது. இந்த பஜாரின் இருபுறமும் 50-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் தனியார் பள்ளி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி போன்றவைகளும் உள்ளன. அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு முத்தோரை பஜார் வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. இது தவிர மஞ்சூர், கோரகுந்தா, எடக்காடு, எமரால்டு, பிக்கட்டி, இத்தலார், பேலிதளா, தங்காடு, கல்லக்கொரை, முள்ளிகூர், நஞ்சநாடு ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ் மற்றும் தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக முத்தோரை பஜார் எப்போதும் வாகன நெருக்கடியால் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில் அங்கு சாலையோரங்களில் தனியார் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகின்றன. மேலும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளன. இதன் காரணமாக முத்தோரை பஜாரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் பிரதானமாக முத்தோரை பஜார் விளங்குகிறது. இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கடும் அவதிப்பட வேண்டி உள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. ஆம்புலன்சுகளுக்கு கூட வழிவிட மிகவும் சிரமமாக உள்ளது. இதற்கு காரணம் சாலையோரங்களில் பிற வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவது தான். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்