ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது போலீசார் நூதன நடவடிக்கை

ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் நூதன நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2019-07-20 22:30 GMT
மானாமதுரை,

மானாமதுரை தாலுகாவைச் சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றிற்கு சென்று வர போதிய பஸ் வசதி இல்லை. குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் அரசு டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் பலரும் இருசக்கர வாகனங்களை நம்பி மானாமதுரை, சிவகங்கை சென்று வருகின்றனர். தற்போது நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்ட பின்பு இருசக்கர வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று வருகின்றன.

இந்தநிலையில் போக்குவரத்து போலீசார் பலமுறை அபராதம் விதித்தும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை. தினமும் பள்ளி, கல்லூரி செல்லும் பலரும் ஹெல்மெட் அணியாமலேயே சென்று வருகின்றனர். இந்தநிலையில் மானாமதுரை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவசங்கர நாராயணன் தலைமையிலான போலீசார் பை-பாஸ் ரோட்டில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகனங்களை நகருக்குள் அனுமதிக்க மறுத்து தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஒரு மணி நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் வரிசையில் நின்றனர். அவர்கள் அனைவரிடமும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விளக்கமாக எடுத்துரைத்தனர். ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்துகள் அதிகரிப்பதாகவும் அதை தவிர்க்கவே போலீசார் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இனி ஹெல்மெட் அணியாமல் வந்தால் நகருக்குள் நுழைய முடியாது என கண்டிப்பாக அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. விபத்துகளை குறைக்கும் வகையில் போலீசாரின் இந்த நூதன நடவடிக்கையை பலரும் பாராட்டினர்.

மேலும் செய்திகள்