பாலியல் பலாத்காரம் செய்தவரின் தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பாலியல் பலாத்காரம் செய்தவரின் தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-07-20 22:45 GMT

மதுரை,

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி 4–ம் வகுப்பு படித்தார். கடந்த 8.10.2006–ல் அந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமி தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பாதமுத்து(35) என்பவர் சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் மம்சாபுரம் போலீசில் புகார் அளித்தனர். போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதமுத்துவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்தது. முடிவில், பாதமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2015–ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி, அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மனுதாரர் மீதான குற்றசாட்டில் உரிய ஆதாரங்களின் அடிப்படையில் தான் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மனுதாரரின் ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அவரை உடனடியாக போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

9 வயது சிறுமி பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அவசியம். எனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான, அதிகப்படியான இழப்பீடு வழங்க வேண்டும் என இந்த கோர்ட்டு பரிந்துரைக்கிறது.

இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்