விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-21 23:00 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் உள்ள சுதாகர் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டதாகும். இங்கு வசித்து வரும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அங்குள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீரை ஏற்ற முடியாத நிலை ஏறபட்டு, சுதாகர் நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தினர்.

ஆனால் பழுதான மோட்டாரை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று, விருத்தாசலம் பெரியார் நகரில் கடலூர் சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே மறியலை கைவிட்டு கலைந்து சென்ற பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள கலைச்செல்வன் எம்.எல்.ஏ. வீட்டின் வழியாக சென்றனர். அப்போது போராட்டம் பற்றி அறிந்த அவர், மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து கலைச்செல்வன் எம்.எல்.ஏ. வட்டார வளர்ச்சி அதிகாரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்குமாறு தெரிவித்தார். மேலும் விருத்தாசலம் நகராட்சி மூலம் லாரி மூலம் குடிநீர் வழங்குவும் ஏற்பாடு செய்தார்.

மேலும் செய்திகள்