சாரல் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிக்கிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.

Update: 2019-07-21 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுமை நிறைந்திருக்கிறது. இதே போல நேற்று முன்தினமும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய் தது. இந்த மழை அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 10.2 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல பேச்சிப்பாறை-3, பெருஞ்சாணி-2.2, சிற்றார் 1-4, சிற்றார் 2-2, பூதப்பாண்டி-1.4, சுருளோடு-3, கன்னிமார்-3.2, முள்ளங்கினாவிளை-4 என்ற அளவில் மழை பெய்திருந்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது.

அணைகளுக்கு நீர்வரத்து

மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. அதாவது பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 623 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று அதிகரித்து 643 கனஅடியாக வந்தது. இதே போன்று பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 333 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 518 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 320 கனஅடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு உள்ளது. மேலும் குளங்களுக்கும் தண்ணீர் வந்துகொண்டு இருப்பதால் குளங்கள் மெல்ல மெல்ல நிரம்பி வருகின்றன.

திற்பரப்பு அருவி

மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு படையெடுத்துள்ளனர். அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்