ராமேசுவரம் பகுதியில் மதுவிற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் தர்ணா

ராமேசுவரம் பகுதியில் மதுக்கடைகள் இல்லாத நிலையில் கள்ளத்தனமாக மதுவிற்பனை அதிகரித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-22 23:15 GMT
ராமநாதபுரம்,

ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புண்ணிய தலமான ராமேசுவரம் பகுதியில் மதுபான கடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டு அகற்றப்பட்டுவிட்டன. இந்த பகுதியில் மதுக்கடை இல்லாததால் ஏராளமானோர் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்து வருகின்றனர். மோட்டார் சைக்கிள்களில் சர்வசாதாரணமாக வந்து மதுபானங்கள் வேண்டிய அளவிற்கு விற்பனை செய்கின்றனர். பணம் இல்லாவிட்டாலும் கடனுக்கு கொடுத்துவிட்டு வட்டி வசூல் செய்வதுபோல் வசூலித்து கொள்கின்றனர். இதுதவிர, முக்கிய இடங்களில் மொத்த விற்பனை போல மதுவிற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்தும் பலனில்லை. சிறுவர்கள் அதிக அளவில் மதுவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கடும்நடவடிக்கை எடுத்து மதுவிற்பனையை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள அரசனூர் ஊராட்சி அகரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அரசனூர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன்கடை மாதத்தில் ஒருநாள் மட்டும் ஒருமணி நேரம் மட்டுமே செயல்படுகிறது. அதன்பின்னர் பொருட்கள் வாங்க வருபவர்களிடம் பொருட்கள் இல்லை என்று சொல்வதோடு கடையை பூட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இந்த கடையை முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அகரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகள் இருப்பதால் வாரத்தில் 3 நாட்கள் அகரம் கிராமத்தில் வந்து ரேஷன்பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்