முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கு: விவசாயிக்கு ஆயுள் தண்டனை

முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் விவசாயிக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-07-22 22:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது தெற்கு ஆண்டாவூருணி. இந்த ஊரைச்சேர்ந்தவர் ராஜ்குமார். மலேசியாவில் வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி ரேவதி(வயது 27). இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் மருதுஉடையார் மகன் ரவிச்சந்திரன்(49). விவசாயியான இவரின் வீட்டின் அருகில் ரேவதி வீட்டிற்கான கழிப்பறை அமைந்துள்ளது.

இதுதொடர்பாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி ரேவதி கழிப்பறைக்கு செல்லும்போது ரவிச்சந்திரன் தகராறு செய்து கல்லால் தாக்கினாராம். மறுநாள் 7-ந்தேதி ரேவதியின் மாமா முன்னாள் ராணுவவீரர் கருப்பையா(65) என்பவர் கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த ரவிச்சந்திரன் தகராறில் ஈடுபட்டு கருப்பையாவை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரேவதி அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ராபி முன்னாள் ராணுவ வீரர் கருப்பையாவை கொலை செய்த ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சவுந்திரபாண்டியன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்