மாவட்ட அளவிலான செஸ் போட்டி தேவகோட்டை பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது

காரைக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் தேவகோட்டை பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

Update: 2019-07-22 22:30 GMT
காரைக்குடி,

சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம், கலைவாணி சதுரங்க கழகம் சார்பில் 12-ம் ஆண்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. போட்டிக்கு மாவட்ட சதுரங்க கழக துணைத்தலைவர் சேவு.முத்துக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் நாராயணன் முன்னிலை வகித்தார். மாவட்ட சதுரங்க கழக தலைவர் கருப்பையா போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் மொத்தம் 270 வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.

இதில் முதலில் நடைபெற்ற 9 வயது பிரிவில் முதல் பரிசை தாழம்பாள் பள்ளி மாணவர் அபினேவ், 2-வது பரிசை மகரிஷி மெட்ரிக் பள்ளி மாணவர் பிரவின், 3-வது பரிசை கே.வி பள்ளி மாணவர் யஷ்வந்த் ஆகியோர் பெற்றனர். தொடர்ந்து 11 வயது பிரிவினருக்கான போட்டியில் முதல் பரிசை தி லீடர்ஸ் அகாடமி பள்ளி மாணவர் அய்யப்பன், 2-வது பரிசை அழகப்பா அகாடமி மாணவர் பிரதீவ் தனுஷ், 3-வது பரிசை தேவகோட்டை இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி மாணவர் சந்தோஷ் தியாகராஜன் ஆகியோர் பெற்றனர்.

13 வயது பிரிவில் முதல் பரிசை ராமநாதன் செட்டியார் பள்ளி மாணவர் அருண்சாமிநாதன், 2-வது பரிசை தி லீடர்ஸ் அகாடமி பள்ளி மாணவர் மாணிக்கம், 3-வது பரிசை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தயா ஆகியோர் பெற்றனர். 15 வயது பிரிவில் முதல் பரிசு செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்டெல்பெர்ட்ஸ்டாலின், 2-வது பரிசை கலைவாணி பள்ளி மாணவர் பாலசுப்பிரமணியன், 3-வது பரிசை சி.ஏ.எ.இ.எஸ் பள்ளி மாணவி ஜனனி ஆகியோர் பெற்றனர். இறுதியாக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி மாணவர் வினோதன், 2-வது பரிசை செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி மாணவர் நிதிஷ்ராகவ், 3-வது பரிசை அழகப்பா மெட்ரிக் பள்ளி மாணவர் பிரேம்சாகர் ஆகியோர் பெற்றனர்.

அதிக போட்டியாளர்களை பங்கேற்க செய்ததற்கான பள்ளி விருதையும், அதிக புள்ளியை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தேவகோட்டை இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி வென்றது. அதன் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கண்ணன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் பள்ளி முதல்வர் கண்ணன், மாவட்ட சதுரங்க இணைச்செயலாளர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியின் நடுவராக சேதுராமன் பங்கேற்றார். முன்னதாக போட்டியின் இயக்குனர் பிரகாஷ்மணிமாறன் வரவேற்றார். முடிவில் உடற்கல்வி இயக்குனர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்