காவிரி ஆற்றில் தொடரும் மணல் கொள்ளை விவசாய நிலம், குடியிருப்பு பகுதிகளையும் விட்டு வைக்காத மர்ம நபர்கள்

ஜீயபுரம் அருகே காவிரி ஆற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. விவசாய நிலம், குடியிருப்பு பகுதிகளையும் விட்டு வைக்காமல், அங்கும் மர்ம நபர்கள் மணல் அள்ளி செல்கின்றனர்.

Update: 2019-07-22 22:45 GMT
ஜீயபுரம்,

காவிரி ஆற்றில் பல இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து பல்வேறு மாவட்டங் களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவிரி தண்ணீர் என்றால் அனைத்து தரப்பு மக்களும் விரும்புவார்கள். காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வப்போது குடி நீருக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் மூடப்பட்டதால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கட்டுமான பணிகளுக்கு மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்த தொடங்கி னார்கள்.

ஆனால் காவிரி ஆற்றில் மணல் கொள்ளை குறைந்ததாக தெரியவில்லை. மணல் திருட்டை தடுப்பதற்காக அவ்வப்போது மணல் கொள்ளையர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனாலும் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெறுகிறது. குறிப்பாக ஜீயபுரம் பகுதியில் உள்ள கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர் போன்ற பகுதிகளில் காவிரி ஆற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளி அதை ஒரு இடத்தில் சேமித்து வைத்து, பின்னர் அதை அதிக விலைக்கு விற்கின்றனர். இதேபோல் விவசாய நிலம், குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலி இடங்களையும் மர்ம நபர்கள் விட்டு வைக்க வில்லை. அந்த இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளும் மர்ம நபர்கள், அங்கிருந்து தினமும் இரவில் பல லாரிகளில் மணலை கடத்தி செல்கின்றனர்.

அவ்வாறு இரவோடு இரவாக மணல் கொள்ளையடித்த பிறகு, அந்த இடத்தில் செம்மண் போன்ற வேறு வகையான மண்ணை கொட்டி நிலத்தை சரி செய்து விடுகின்றனர்.

இரவு நேரங்களில் லாரிகளில் அதிவேகமாக மணல் கொண்டு செல்வதால் ஏற்படும் சத்தத்தால், அந்த பகுதி மக்கள் சரியாக தூங்க முடியாமலும், மணல் கடத்தலை அறிந்தும் மிகுந்த வேதனையடைகின்றனர். அதிக பாரத்துடன் லாரிகள் செல்வதால், ஊராட்சி சார்பில் போடப்பட்டுள்ள சாலையும் சேதமடைந்து விட்டது. எனவே இந்த பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்