சாலை விரிவாக்கத்தின் போது மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்ய வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

சாலை விரிவாக்கத்தின் போது மரங்களை வெட்டாமல் மறு நடவு செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-07-22 23:15 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் திருமாறன், வக்கீல் திருமார்பன் ஆகியோர் கொடுத்த மனுவில், புவனகிரி தாலுகா கொத்தட்டை கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த 1983-ம் ஆண்டு தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட நிலத்தை, இழப்பீடை வாங்கிய நில உரிமையாளர்களே ஆக்கிரமித்து கொண்டனர். அதனை மீட்டுத்தராவிட்டால் சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.

இதேபோல் வேளங்காடு கிராமத்தில் 1965-ம் ஆண்டு 80 ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட 9 ஏக்கர் 70 சென்ட் நிலத்தில் அனுமதியின்றி மணல் வெட்டி கடத்தப்படுகிறது. இதில் ஈடுபடுகிறவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

சி.முட்லூர் கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், சி.முட்லூர், ஏ.மண்டபம், தீர்த்தாம் பாளையம் கிராமங்களி்ல 45-ஏ தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் முன்பு பொதுமக்கள் குறைகேட்புகூட்டம் நடத்தாதது கண்டிக்கத்தக்கது. கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஒரே கிராமத்தில் பலமதிப்பீடு நிர்ணயிக்காமல் தற்போதைய சந்தை மதிப்புப்படி அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும், விவசாய நிலங்களில் உள்ள நீண்டநாள் பலன் தரும் மரங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தர வேண்டும்

சாலை விரிவாக்கத்தின் போது மரங்களை வெட்டாமல், அவற்றை மறு நடவு செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

இந்த மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதன்பிறகு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான ஆய்வுக்கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் தலைமையில் நடந்தது. இதில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து வரும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும் என்று அறிவுறுத்ததப்பட்டது்.

முன்னதாக வடக்குத்து கிராமத்தைச்சேர்ந்த சக்திவேல் என்பவர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார். சக்திவேலின் மகன் சவுந்திரவேல், ஏரியில் மூழ்கி பலியானதால், அவருடைய குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து இத்தொகை வழங்கப்பட்டது.

சிதம்பரம் தாலுகாவைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மனு அளித்த சில மணி நேரத்திலேயே உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார். இக்கூட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்