தடுப்பணையை சீரமைக்கக்கோரி விருத்தாசலம் வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தடுப்பணையை சீரமைக்கக்கோரி விருத்தாசலம் வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-22 21:30 GMT
விருத்தாசலம், 

சிறுபாக்கம்-அரசங்குடி இடையே வனப்பகுதியில் உள்ள சுண்ணாம்பு ஓடையில் தடுப்பணை கட்டப்பட்டது. மழைக்காலங்களில் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை குடித்து வனவிலங்குகள் தாகம் தீர்த்து வந்தன. மேலும் இந்த தடுப்பணை மூலம் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து காணப்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அந்த தடுப்பணை பலத்த சேதமடைந்தது. இதனால் மழைக்காலங்களில் அதில் தண்ணீரை தேக்கி வைக்கமுடியவில்லை.

இதன் காரணமாக தண்ணீரை தேடி காப்புக்காட்டில் இருந்து கிராமப்புறங்களுக்கு வரும் வன விலங்குகள் சில நேரங்களில் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருவதால் கிராமப்புற மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது.

இதை தவிர்க்க சுண்ணாம்பு ஓடையில் சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சிறுபாக்கம், அரசங்குடி, எஸ்.புதூர், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி, கீழ் ஒரத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பில் விருத்தாசலம் வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் தலைமை தாங்கினார். ரகுராமன், சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்