கூட்டுறவு சங்கத்தில் வாக்கு சீட்டுகள் எரிப்பு: தனிப்படை போலீசார் விசாரணை மர்மநபர்களை பிடிக்க தீவிரம்

மார்த்தாண்டம் கூட்டுறவு சங்கத்தில் வாக்கு சீட்டுகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-22 22:15 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் வெட்டுமணியில் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு சங்க நிர்வாகிகள் தேர்தல் கடந்த 7.5.2018-ல் நடந்தது. அப்போது, சிலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் தனி அறையில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு மர்ம கும்பல் கூட்டுறவு சங்கத்தில் புகுந்து, அங்கு பணியில் இருந்த காவலாளி கனகராஜை சரமாரியாக தாக்கி அருகில் இருந்த மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் வாக்கு சீட்டுகள் இருந்த அறை கதவை உடைத்து உள்ளே புகுந்து வாக்கு சீட்டுகளை வெளியே கொட்டி தீ வைத்து எரித்தனர்.

4 மர்ம நபர்கள்

இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். காவலாளி கனகராஜிடம் விசாரணை நடத்திய போது, 4 மர்ம நபர்கள் தன்னை தாக்கிவிட்டு, வாக்கு சீட்டுகளை எரித்ததாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து சங்க செயலாளர் நல்லதம்பி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனிப்படை

இதற்கிடையே, மர்ம நபர்களை பிடிக்க தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் மர்ம நபர்களை பிடிக்க பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்