காடையாம்பட்டியில் போலி டாக்டர் கைது கிளினிக்கிற்கு சீல் வைப்பு

காடையாம்பட்டியில் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். அவரது கிளினிக்கிற்கும் சீல் வைக்கப்பட்டது.

Update: 2019-07-22 22:00 GMT
ஓமலூர்,

ஓமலூர் அருகே காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் முருகேசன் (வயது 50) என்பவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேலுவுக்கு புகார் சென்றது. அவர் இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டார்.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கம், மாநில ஆய்வு மற்றும் கண்காணிப்பு குழு துணை சூப்பிரண்டு தாமஸ் பிரபாகர், அலுவலக கண்காணிப்பாளர் கமலக்கண்ணன், உதவியாளர் நடராஜன், தலைமை காவலர் ராஜீவ்காந்தி, சேலம் சுகாதார மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சத்யா, ஓமலூர் மருத்துவ அலுவலர் ஜெயேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காடையாம்பட்டிக்கு வந்தனர்.

பின்னர் சந்தைப்பேட்டையில் உள்ள முருகேசன் நடத்தும் கிளினிக்கிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் எதுவும் இல்லை. ஆனால் 3 டிப்ளமோ சான்றிதழ்களை மட்டும் முருகேசன் போலியாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த மருந்து, மாத்திரைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். மருந்து, மாத்திரைகளும் காலாவதியாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை கைது செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான முருகேசன் ஏற்கனவே மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனையின் போது காடையாம்பட்டி தாசில்தார் மகேஸ்வரி, மருந்தக ஆய்வாளர் சக்திவேல் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தநிலையில் முருகேசன் நடத்தும் கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்