முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போங்கள் ; குமாரசாமி மீது பா.ஜனதா சாடல்

அரசியல் சாசனம் மற்றம் மக்கள் மீது மதிப்பு வைத்திருந்தால் உடனே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போங்கள் என்று குமாரசாமி மீது பா.ஜனதா சாடியுள்ளது.

Update: 2019-07-22 23:25 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில், முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து தள்ளாடி வருகிறது.

இதைதொடர்ந்து குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆனால் இதுவரை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் கூட்டணி இழுத்தடித்து வருவதாக பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தனது முகநூல் பக்கத்தில் முதல்-மந்திரி குமாரசாமி மீது சாடி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், “உங்களுக்கு (குமாரசாமி) அரசியல் சாசனம் மற்றும் கர்நாடக மக்கள் மீது நம்பிக்கையும், மதிப்பும் இருந்தால் உடனே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போங்கள்.

கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. அப்படி இருந்தும் கவர்னர் கெடுவிதித்தும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் இழுத்தடித்து வருகிறது“.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

அதுபோல் டுவிட்டர் பக்கத்திலும் பா.ஜனதா கட்சி, ‘உங்களை கர்நாடக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்‘ என்ற ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளது. இது டிரெண்ட் ஆகி வருகிறது. இதில் பா.ஜனதாவினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கூட்டணி அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியினரும் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்