விழுப்புரத்தில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்த போது விஷவாயு தாக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2019-07-23 23:09 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்த போது விஷவாயு தாக்கி தொழிலாளி பலியான பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2006-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நகரில் உள்ள 42 வார்டுகளில் இருக்கும் பெரும்பாலான வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணைப்பு வழங்கப்பட்டுளள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாதாள சாக்கடை குழாய் வழியாக விழுப்புரம் காகுப்பம் சாலையில் உள்ள பாதாள சாக்கடை கிணற்றுக்கு வந்தடைகிறது. பின்னர் அந்த பாதாள சாக்கடை கிணற்றில் இருக்கும் மின் மோட்டார் மூலம் கழிவுநீர் ‘பம்பிங்’ (உறிஞ்சப்பட்டு) செய்யப்பட்டு அவை காகுப்பம் ஏரியின் அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு காகுப்பம் ஏரியில் கலக்கிறது.

இந்நிலையில் காகுப்பம் சாலையில் உள்ள பாதாள சாக்கடை கிணற்றில் இருக்கும் மின் மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பழுதடைந்தது. இதனால் நகரின் பல இடங்களில் பாதாள சாக்கடைகுழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகளின் உத்தரவின்பேரில் இந்த மின் மோட்டார் பழுதை சரிசெய்யும் பணியில் நேற்று மாலை 3 மணியளவில் நகராட்சி ஒப்பந்த தொழிலாளியான திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாதம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாரி (வயது 38) என்பவர் உள்பட 3 பேர் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் 3 பேரும் கயிறு மூலம் அந்த பாதாள சாக்கடை கிணற்றுக்குள் இறங்கி மின் மோட்டார் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென கழிவுநீர் அதிகமாக வெளியேறியது. உடனே மாரி மட்டும் கழிவுநீருக்குள் இறங்கிஅடைப்புகளை நீக்க சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் மாரியை காப்பாற்ற முயன்றனர். அப்போது வி‌‌ஷவாயு தாக்கியதில் மாரி இறந்திருப்பது தெரியவந்தது. மேலும் வி‌‌ஷ வாயுவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர்கள் 2 பேருக்கும் லேசான மயக்கம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் உடனடியாக பாதாள சாக்கடை கிணற்றில் இருந்து மேலே ஏறி வந்துவிட்டனர்.

பின்னர் இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் நகராட்சி அதிகாரிகளுக்கும் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் கயிறு மூலம் அந்த பாதாள சாக்கடை கிணற்றுக்குள் இறங்கி சுமார் ½ மணி நேரம் போராடி மாரியின் உடலை மீட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த விழுப்புரம் நகர போலீசார், மாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாரிக்கு அனுசுயா என்ற மனைவியும், இளவரசி (9), மோனி‌ஷா (6), தனுஸ்ரீ (3) என்ற 3 மகள்களும் உள்ளனர்.

வி‌‌ஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்