அரசு பள்ளியில் மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பூட்டு போட்டு முன்னாள் மாணவர்கள் போராட்டம்

பொன்பரப்பி அரசு பள்ளியில் மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பூட்டு போட்டு முன்னாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-24 23:00 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த பள்ளிக்கு நடப்பு கல்வியாண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வந்துள்ளது. அந்த மடிக்கணினிகள் பள்ளியின் ஒரு அறையில் வைக்கப்பட்டு, நேற்று முன்தினம் அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு நேற்று வழங்கப்படவேண்டிய மடிக்கணினிகள் மட்டும் அதே அறையில் வைக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த அந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்து, தங்களுக்கு மடிக்கணினிகள் வராததை கண்டித்தும், உடனடியாக மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை அடைத்து பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வினோத்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தற்போது படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினிகள் வந்து உள்ளது அதனை வழங்குகிறோம். முன்னாள் மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று அமைச்சரே உறுதி அளித்துள்ளார். அவ்வாறு மடிக்கணினிகள் வந்தால் உடனடியாக வழங்கப்படும் என்றார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மாணவர்கள் தாங்கள் அறையில் பூட்டியிருந்த பூட்டை அகற்றி விட்டு கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து தற்போது பிளஸ்-1 பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்