பெண் கொலை வழக்கில் லாரி டிரைவர் கைது நகைக்காக கொன்றது அம்பலம்

தென்னிலை அருகே பெண் கொலை வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். நகைக்காக அந்த பெண்ணை அவர் கொலை செய்தது அம்பலமானது.

Update: 2019-07-27 23:00 GMT
க.பரமத்தி,

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள ராக்கியாகவுண்டன் வலசில் கடந்த 21-ந்தேதி அதிகாலை பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே மல்லூத்து பகுதியை சேர்ந்த சேகர் மனைவி தனலட்சுமி (வயது 38) என தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அசோகன், சுப்பிரமணி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், திருமேனி, திருப்பதி, கணேசன் ஆகியோர் கொண்ட 2 தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

லாரி டிரைவர் கைது

இந்தநிலையில் தனலட்சுமியை கொலை செய்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள அத்திவாடியை சேர்ந்த லாரி டிரைவர் மோகன் (வயது 38) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது,

தனலட்சுமிக்கும், மோகனுக்கும் கடந்த இரண்டு வருடமாக பழக்கம் இருந்து உள்ளது. இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி மோகன் தனது நண்பரின் காரில், தனலட்சுமியை ஏற்றி கொண்டு, நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். செல்லும் வழியில் மோகன் தனலட்சுமியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தனலட்சுமி மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன் குறுக்கு வழியில் செல்லலாம் என கூறி, காரை தென்னிலை வழியாக காரை ஓட்டி சென்றுள்ளார். ராக்கியாகவுண்டன்வலசு வந்ததும் காரை விட்டு தனலட்சுமியை கீழே இறங்கச்சொல்லி மீண்டும் பணம் கேட்டுள்ளார். ஆனால் அப்போதும் தனலட்சுமி பணம் தர மறுத்ததால் அவரை கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து விட்டு, தாலிக்கொடியை பறித்துக்கொண்டு மோகன் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் மோகனை கைது செய்தனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்