அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் என்னை தொடர்பு கொண்டனர் - சித்தராமையா பரபரப்பு பேட்டி

3 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் என்னை தொடர்பு கொண்டனர் என்று முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-27 23:15 GMT

பெங்களூரு, 

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. அவ்வாறு ராஜினாமா செய்திருந்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்து காங்கிரசில் சேர்ந்த ஆர்.சங்கரை தகுதி நீக்கம் செய்ததுடன், வருகிற 2023–ம் ஆண்டு வரை 3 பேரும் தேர்தலில் போட்டியிட சபாநாயகர் ரமேஷ்குமார் தடை விதித்துள்ளார்.

இந்த நிலையில், ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மீண்டும் காங்கிரசில் சேருவதற்காக சித்தராமையாவை தொடர்பு கொண்டு பேச முயன்றதாகவும், ஆனால் சித்தராமையா பேசவில்லை என்றும் முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீல் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது உண்மையில்லை என்ற தகவலும் வெளியானது. இதுகுறித்து நேற்று சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;–

பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ.க்கள் மும்பை சென்றதால் கூட்டணி அரசு கவிழ்ந்தது. ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து கடந்த 25–ந் தேதி சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். அதன்பிறகு மும்பையில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர், என்னை செல்போனில் தொடர்பு கொண்டனர். அது உண்மை தான். 2 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பு கொண்டு என்னிடம் பேச விரும்பினாலும், அவர்களுடன் நான் பேசவில்லை. தகுதி நீக்கத்திற்கு பயந்து என்னை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்திருக்கலாம்.

கூட்டணி அரசு கவிழ்ந்ததற்கு அவர்களே காரணம். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அந்த எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தால் அரசு கவிழ்ந்திருக்காது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பணம், பதவி ஆசைக்காக மும்பைக்கு சென்றுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவில் பா.ஜனதாவினர் தொடர்பு இல்லை என்று சொல்கின்றனர். இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதாவுக்கு ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக ஜி.டி.தேவேகவுடா கூறி இருப்பது பற்றி எனக்கு தெரியாது. அதுபற்றி அவரிடமே கேளுங்கள்.

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு அரசியலமைப்பு சட்டப்படியோ, தர்மநியதிப்படியோ அமையவில்லை. கவர்னர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்த எடியூரப்பா முதல்–மந்திரியாக பதவி ஏற்று இருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. இது ஜனநாயகத்தின் வெற்றி அல்ல. குதிரைபேரத்தின் வெற்றி.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்