மோசடி வழக்கில் மகளிர் மனிதவள மேம்பாட்டு கட்சியின் தலைவி கைது ஐதராபாத்தில் பதுங்கி இருந்தபோது பிடிபட்டார்

மோசடி வழக்கில் மகளிர் மனிதவள மேம்பாட்டு கட்சியின் தலைவி நுகிரா ஷேக் கைது செய்யப்பட்டார். அவர் ஐதராபாத்தில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசாரிடம் பிடிபட்டார்.

Update: 2019-07-29 22:45 GMT
சிவமொக்கா, 

மகளிர் மனித வள மேம்பாட்டு கட்சியின் தலைவியாக இருந்து வருபவர் நுகிரா ஷேக். இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்தன. குறிப்பாக ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்து சிவமொக்காவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பான புகார்கள் போலீசாருக்கும் சென்றன. அதன்பேரில் நுகிரா ஷேக் மீது சிவமொக்கா மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவந்தனர். மேலும் அவரை பிடிக்க மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் நுகிரா ஷேக் ஐதராபாத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஐதராபாத்துக்கு சென்று நுகிரா ஷேக்கை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவமொக்காவுக்கு அழைத்து வந்தனர்.

அதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மகளிர் மனிதவள மேம்பாட்டு கட்சியின் தலைவியை மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சிவமொக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்