சின்னாளப்பட்டி அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்றி குளம்-கால்வாய்களை தூர்வாரும் பணி - கலெக்டர் ஆய்வு

சின்னாளப்பட்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி குளம் மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணியை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.

Update: 2019-07-30 22:45 GMT
திண்டுக்கல்,

தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் குளங்கள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணி நடக்கிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் 114 குளங்கள் மற்றும் தண்ணீர் வரும் கால்வாய்களில் தூர்வாரும் பணி நடக்கிறது. இதற்காக அரசு ரூ.34 கோடியே 35 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கிடையே பெரும்பாலான குளங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக விவசாயிகள் புகார் அளித்தனர். இதையடுத்து குடிமராமத்து பணிக்கு தேர்வான குளங்கள், கால்வாய்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டது. அதன்பின்னர் அனைத்து குளங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணி நடக்கிறது.

இந்த திட்டத்தில் சின்னாளப்பட்டி அருகே தொப்பம்பட்டியில் உள்ள அரண்மனைஓடை குளமும் தேர்வு செய்யப்பட்டது. இந்த குளம் சுமார் 26 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும். இந்த குளத்தின் மூலம் சுமார் 145 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இந்த குளத்துக்கு சிறுமலையில் இருந்து அரண்மனைகால்வாய், அவரிக்காடு கால்வாய், மகளம்குளத்து கால்வாய் ஆகிய 3 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வருகிறது.

இந்த 3 கால்வாய்கள் மற்றும் குளத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதனால் கால்வாய்கள் மிகவும் குறுகலாக மாறியது. மேலும் குளத்தின் கரையும் பலமின்றி இருந்தது. இதையடுத்து குளம் மற்றும் கால்வாய்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டு அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து ரூ.30 லட்சம் செலவில் குளம் மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை கலெக்டர் விஜயலட்சுமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய்களில் நடைபெற்ற பணிகளை பார்வையிட, சிறுமலை அடிவாரம் வரை கலெக்டர் சென்றார். அப்போது குளம் மற்றும் வரத்து கால்வாய்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். மழை காலத்தில் மழைநீர் முழுமையாக குளத்துக்கு வரும் வகையில் தூர்வார வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதேபோல் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டியில் பொன்னன்குளத்தில் ரூ.25 லட்சம் செலவில் நடைபெறும் குடிமராமத்து பணியை பார்வையிட்டார். அங்கு சேதமான குளத்தின் கரை மற்றும் மதகு, வரத்து கால்வாயை பார்வையிட்டார். அவற்றை முழுமையாக சீரமைக்க வேண்டும். மேலும் குளத்துக்கு தடையின்றி தண்ணீர் வரும் வகையில் கால்வாயை தூர்வாரி சீரமைக்கும்படி உத்தரவிட்டார். அந்த குளம் மூலம் 45 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிள்ளையார்நத்தம் குளத்துக்கு கலெக்டர் சென்றார். அங்கு ரூ.60 லட்சம் செலவில் குளம் மற்றும் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார். அதேபோல் குளத்தின் மதகுகள், கரைகளை சரிசெய்து மழைநீரை தேக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் குடிமராமத்து பணிகள் குறித்து அதிகாரிகள், விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த குளம் மூலம் சுமார் 600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், உதவி பொறியாளர்கள் நீதிபதி, தங்கவேலு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்