புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஒரத்தநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-07-30 22:15 GMT
ஒரத்தநாடு,

ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம் எதிரே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் சீனி.முருகையன், திருவோணம் ஒன்றிய செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

கஜா புயலில் வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு அறிவித்த கான்கிரீட் வீடுகளை உடனடியாக கட்டி தர வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டு வீடு மற்றும் தென்னை மரங்களை இழந்தவர்களுக்கு விடுதல் இல்லாமல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு இழப்பீடு

தரமற்ற மானிய விதையால் பாதிக்கப்பட்ட உளுந்து, மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் உள்பட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென அங்கு வந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டார். உடனே அந்த வாலிபரை போலீசார், ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்