குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

குளித்தலை கடம்பவ னேசுவரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2019-08-01 22:30 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலையில் பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திரு விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழாவை யொட்டி கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி விக்னேசுவரர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டது. கடந்த 27-ந்தேதி இக் கோவிலில் உள்ள அம்பாள் கொடிகம்பத்தில் கொடியேற்றப்பட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதனைதொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதுபோல் அன்று முதல் காலையில் பல்லக்கிலும், மாலையில் மஞ்சள் கேடயம், யாளி, அன்னம், தாமரை உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் வீதிஉலா நடைபெற்று வருகிறது.

தேரோட்டம்

இத்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு வெள்ளி ரிஷபவாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பாள் வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்