மேட்டூர் அணை நீர்மட்டம் 52 அடியாக உயர்ந்தது தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம் 52 அடியாக உயர்ந்தது. அதே நேரத்தில் ஆடிப்பெருக்கு விழா நிறைவு பெற்றதை அடுத்து அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப் பட்டுள்ளது.

Update: 2019-08-04 22:30 GMT
மேட்டூர், 

தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் தீவிரம் அடைந்தது. இந்த மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்தது.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி முதல் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப் பட்டது.

இந்த தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன்காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் படிப் படியாக குறைக்கப்பட்டு உள்ளது.

நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆடிப்பெருக்கு விழாவிற்காக கடந்த 2-ந் தேதி காலை முதல் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த விழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்