அகரப்பேட்டையில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டம் அதிகாரிகள் தகவல்

அகரப்பேட்டையில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2019-08-04 22:45 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் அகரப்பேட்டை ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலமாக மரக்கன்றுகளை நட்டு தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அகரப்பேட்டையில் மீன் குஞ்சு வளர்ப்பு மையம் அருகே உள்ள 1½ ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலத்தை கடந்த ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் சீரமைத்து, உழவு செய்தனர். அங்கு இயற்கை உரம் தெளிக்கப்பட்டது.

இந்த தோட்டத்தில் மருதம், கொய்யா, நாவல், நெல்லி, பலா, வேம்பு, தேக்கு உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தோட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் தினமும் தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நடப்பட்ட 384 மரக்கன்றுகளும் தற்போது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

15 ஆயிரம் மரக்கன்றுகள்

காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள இந்த மரத்தோட்டத்தை சமீபத்தில் பார்வையிட்ட பூதலூர் ஒன்றிய அதிகாரிகள், இதே பகுதியில் நர்சரி அமைத்து மேலும் 15 ஆயிரம் மரக்கன்றுகளை வளர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். வருகிற பருவ மழை காலத்தில் பூதலூர் ஒன்றியத்தின் பிற பகுதிகளில் நடுவதற்கு ஏதுவாக இந்த 15 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன.

கடந்த ஆண்டு மரக்கன்றுகள் நடப்பட்ட இடத்துக்கு அருகில் காலியாக கிடந்த இடத்தில் நர்சரி அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்கு நிலத்தை சீரமைக்கும் பணிகளை தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு எரு கலந்த மண் நிரப்பி பழ மர விதைகள் விதைக்கப்பட உள்ளன. இவை முளைத்து நடுவதற்கு ஏதுவாக தயார் ஆனவுடன் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளுக்கும் ஒன்றிய ஆணையர் உத்தரவின்படி அனுப்பி வைக்கப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்