கொடுமுடியில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்த 2 பேர் கைது

கொடுமுடியில் பெண்ணிடம் நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-09 22:45 GMT
கொடுமுடி,

கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையம் ஒத்தக்கடையை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சவுந்திரம் (வயது 47). கடந்த 7-ந் தேதி இவர் ஈரோட்டில் இருந்து கொடுமுடிக்கு தனியார் பஸ்சில் வந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. கொடுமுடி பழைய பஸ் நிலையம் வந்தபோது அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை காணவில்லை. கூட்டத்தை பயன்படுத்தி சவுந்திரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் யாரோ அவருடைய நகையை அபேஸ் செய்தது தெரிய வந்தது.

உடனே அவர் இதுகுறித்து கொடுமுடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்தவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் வடக்கு புதுப்பாளையம் பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் 2 பெண்கள் நடந்து வந்தனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் விடுதலைப்பட்டியை சேர்ந்த சக்திவேல் மனைவி தேவி (40), ரமேஷ் மனைவி ரேவதி (29) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து பஸ்சில் பயணம் செய்த சவுந்திரத்தின் நகையை அபேஸ் செய்ததும்,’ தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 2 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்