குற்றவாளிகளை கண்டறிய போலீசாருக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் வேண்டுகோள்

குற்றவாளிகளை கண்டறிய போலீசாருக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-08-10 22:45 GMT
குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அகரஓகையில் 4 வழி சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் 4 கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர். இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமை தாங்கினார். தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராவை இயக்கி வைத்தார். பின்னர் குடவாசல் காவலர் குடியிருப்பு பகுதியில் சிறுவர் பூங்காவை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சிறுவர் பூங்கா

குடவாசல் போலீஸ் சரகத்தில் மஞ்சக்குடி கடைத்தெரு மற்றும் அகரஓகை நான்கு வழி சந்திப்பு பகுதியில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொதுமக்கள் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளை கண்டறிய உதவியாக இருக்கும். குற்றவாளிகளை கண்டறிய போலீசாருக்கு, பொதுமக்கள் உதவ வேண்டும். குடவாசலில் நன்னிலம் சாலை, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உடன் நிறைவேற்றப்படும்.

இங்குள்ள காவலர் குடியிருப்பில் குழந்தைகள் விளையாடும் வகையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை காவலர்களின் குழந்தைகள் மட்டும் இல்லாமல் மற்ற குழந்தைகளும் சேர்ந்து விளையாட வேண்டும். இங்கு பலவகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலன் தரும் மரங்களை வெட்டாமல் புதிய மரக்கன்றுகளை நட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசெல்வன், குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், த.மா.கா. மாவட்ட தலைவர் தினகரன், வர்த்தக சங்க துணைத்தலைவர் ஜபார், செயலாளர் பிரபாகரன், நிர்வாகி ஆதித்யாபாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்