செந்துறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று மதியம் அங்கனூர்-தளவாய் சாலையில் திடீரென்று அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-10 22:45 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சன்னாசிநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவராமபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மின்மோட்டார் பழுதால் கடந்த சில வாரங்களாக தண்ணீர் ஏற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று மதியம் அங்கனூர்-தளவாய் சாலையில் திடீரென்று அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தளவாய் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரி செய்து, குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

மேலும் செய்திகள்