சேலம் நிதி நிறுவன அதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது

சேலம் அருகே நிதி நிறுவன அதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடியபோது போலீசார் அவரை பிடித்தனர்.

Update: 2019-08-10 22:05 GMT
தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கொம்பாடியூரை சேர்ந்தவர் மணி (வயது 55). நிதி நிறுவன அதிபரான இவரை, கடந்த மாதம் மும்முடி பகுதியில் வைத்து மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்று ரூ.1 கோடி கேட்டு மிரட்டினர். இது தொடர்பாக தலைவாசல் போலீசில் அவரது உறவினர்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் கடத்தப்பட்ட மணியை தீவிரமாக தேடினர். மேலும், கடத்தல் கும்பலை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கடத்தல்காரர்களை தேடி வந்தநிலையில், 2 நாட்களுக்கு பின்பு திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நிதி நிறுவன அதிபர் மணியை விடுவித்து விட்டு கடத்தல் கும்பல் தப்பிஓடியது. அதன்பிறகு போலீசார் மணியை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், அவரை தூத்துக்குடிக்கு கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது.

இந்த கடத்தல் வழக்கில் தங்கராஜ், சக்திவேல், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் தலைவாசல் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கும்பல் தலைவனான மயிலாடுதுறை அருகே நீடூரை சேர்ந்த பிரபல ரவுடி விஜய் என்கிற விஜயன் (38) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இவர் மீது 5 கொலை வழக்கு, வழிப்பறி, திருட்டு, ஆள் கடத்தல் உள்பட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே கடலூர் மாவட்ட போலீசாரும் ரவுடி விஜயை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில், ஏற்கனவே கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் மணியை போனில் தொடர்பு கொண்ட ரவுடி விஜய், ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். அப்போது, போலீசுக்கு சென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த தனிப்படை போலீசார், மணியின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று அதிகாலை ஆள் கடத்தல் கும்பல் தலைவன் விஜய் தனது காரில் கொம்பாடியூருக்கு வந்து மணியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், கும்பல் தலைவன் விஜயை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர் போலீசாரின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து ஓட்டம் பிடித்தார். அப்போது, அங்குள்ள கருமாரியம்மன் கோவில் சுவர் மீது ஏறி கீழே குதித்தபோது, அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து விஜயை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்