பெரம்பலூரில் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கம்

பெரம்பலூரில் நடந்த மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

Update: 2019-08-11 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில், மாநில அளவிலான 32-வது ஆண்டு ஜூனியர்-சீனியர்களுக்கான தேக்வாண்டோ போட்டி பெரம்பலூர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஜூனியர் பிரிவில் குருக்கி (பைட்டிங்), பூம்சே ஆகிய தேக்வாண்டோ போட்டிகளின் 10 எடை பிரிவுகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

நேற்று 17 வயதிற்கு மேற்பட்ட சீனியர் பிரிவில் குருக்கி, பூம்சே ஆகிய தேக்வாண்டோ போட்டிகளில் 8 எடை பிரிவுகளில் ஆண்கள்-பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்பட 28 மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

தங்கப்பதக்கம்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது. 17 வயதிற்குட்பட்ட ஜூனியர், 17 வயதிற்கு மேற்பட்ட சீனியர் பிரிவில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும், 2-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு வெள்ளிப்பதக்கமும், 3, 4-ம் இடங்களை பிடித்தவர்களுக்கு வெண்கலப்பதக்கமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

முதலிடம் பிடித்தவர்கள் தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

மேலும் செய்திகள்