வெள்ளப்பள்ளத்தில் துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு

வெள்ளப்பள்ளத்தில் துறைமுகம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2019-08-11 22:00 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். மீனவர்கள் வலையில் காலா, வாவல், திருக்கை நண்டு, இறால் ஆகியவை அதிக அளவில் சிக்குகின்றன. மேலும் மட்லீஸ்ட் மீன்களும் கிடைக்கின்றன.

வெள்ளப்பள்ளத்தில் துறைமுகம் இல்லாததால் மழை, புயல் காலங்களில் படகுகள் சேதமடைகின்றன. பைபர் படகுகளை டிராக்டர் வைத்து கரைக்கு அப்பால் வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அதிக செலவு செய்ய வேண்டி உள்ளது. தினமும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் துறைமுகம் இல்லாததால் படகுகளை நங்கூரமிட்டு கடலில் நிறுத்தி வைக்கின்றனர். இவ்வாறு நிறுத்தும் போது காற்றில் படகுகள் மோதி சேதம் அடைவதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

துறைமுகம்

மீன்பிடி காலத்தில் பழுது பார்க்க படகுகளை வெளியூருக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக வெள்ளப்பள்ளத்தில் துறைமுகம் அமைக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, வெள்ளப்பள்ளத்தில் துறைமுகம் அமைக்க ஒப்புதல் அளித்து அதற்கான ஆய்வு பணியையும் நடத்தியது. ஆனால் பணி இன்னும் தொடங்கவில்லை. எனவே வெள்ளப்பள்ளத்தில் துறைமுகம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்