100 நாள் வேலை-ஊதியம் முழுமையாக வழங்கப்படவில்லை; மாணிக்கம்தாகூர் எம்.பி.யிடம் கிராம மக்கள் முறையீடு

விருதுநகர் யூனியனில் உள்ள கிராமங்களில் 100 நாள் வேலையும், அதற்கான ஊதியமும் முழுமையாக வழங்கப்படவில்லை என ஆய்விற்கு சென்ற மாணிக்கம்தாகூர் எம்.பி.யிடம் கிராம மக்கள் முறையிட்டனர்.

Update: 2019-08-14 22:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம்தாகூர் நேற்று விருதுநகர் யூனியனில் உள்ள ஆமத்தூர், மூளிப்பட்டி, செங்கோட்டை, செங்குன்றாபுரம், பாவாலி, தாதம்பட்டி, ஒண்டிப்புலி, கட்டனார்பட்டி, கன்னிசேரி, சின்னவாடி ஆகிய கிராமங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதுடன் கிராம மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவருடன் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சென்றிருந்தனர்.

ஆய்வின்போது, பெண்கள் தங்களுக்கு முழுமையாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என்றும், 50 முதல் 70 நாட்கள் வரை மட்டுமே வேலை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் செங்குன்றாபுரம் கிராமத்தில் வேலை செய்த 43 நாட்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.

திட்டப்பணிகள் குறித்து களப்பணியாளர்கள் அறிக்கை கொடுக்காததே குறைவான வேலை நாட்கள் வழங்கியதற்கு காரணம் என புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணிக்கம்தாகூர் எம்.பி. பஞ்சாயத்து செயலாளரிடமும், களப்பணியாளரிடமும் ஒரு வருடத்தில் 100 நாட்கள் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சினை நிலவுவதாக பெண்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து கிராமங்களில் குடிநீர் பிரச்சினைக்கான காரணத்தை கண்டறிந்து, முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க கிராம மக்கள் கேட்டுக்கொள்ளும் நிலையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பஞ்சாயத்து செயலர்களை மாணிக்கம்தாகூர் எம்.பி. கேட்டுக்கொண்டார்.

மேலும் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் தரும் கோரிக்கை மனு மீது தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்