வெள்ளமடம் அருகே தாறுமாறாக ஓடிய டெம்போ, வாகனங்கள் மீது மோதல்; 4 பேர் காயம்

வெள்ளமடம் அருகே தாறுமாறாக ஓடிய டெம்போ, வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-08-15 22:45 GMT
ஆரல்வாய்மொழி,

நாகர்கோவிலில் இருந்து கண்ணன்பதி நோக்கி நேற்று அரசு பஸ் சென்றது. வெள்ளமடம் அருகே உள்ள குமரன்புதூர் விலக்கு பகுதியில் நெடுஞ்சாலையில் அந்த பஸ் திரும்ப முயன்றது. அப்போது சென்னையில் இருந்து களியக்காவிளை நோக்கி மீன் பாரம் ஏற்றிச் சென்ற டெம்போ வேகமாக வந்தது.

இந்த நிலையில் அந்த டெம்போ எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது லேசாக மோதியது. இதனால் டெம்போ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் அந்த வழியாக வந்த 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மீது டெம்போ மோதி விபத்துக்குள்ளானது.

4 பேர் காயம்

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த டெல்லியை சேர்ந்த சவுரப் அகர்வால் (வயது 28), ஊட்டியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் காரில் வந்த விஜி பாலகிருஷ்ணன், சிபு ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விபத்தை ஏற்படுத்திய டெம்போவை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.

போலீஸ் விசாரணை

மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், டெம்போவை ஓட்டி வந்த நபர் நெய்வேலி பகுதியை சேர்ந்த கார்த்திக் (39) என்பது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்