முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித்தர வலியுறுத்தல்

இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து இணை இயக்குனர் ஆய்வு செய்தார். அப்போது வீடு கட்டித்தர வலியுறுத்தினர்

Update: 2019-08-16 23:00 GMT
சிவகங்கை,

மாவட்ட மறுவாழ்வுத்துறை சார்பில் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் சென்னை தலைமை அலுவலக மறுவாழ்வுத் துறை இணை இயக்குனர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம், அரசு வழங்கும் திட்டங்கள் சரியாக கிடைக்க பெறுகிறதா என்று இணை இயக்குனர் கேட்டறிந்தார். அப்போது அவரிடம் இலங்கை தமிழர்கள் கூறியதாவது:- மாவட்டத்தில் உள்ள 6 முகாம்களில் 3 ஆயிரத்து 25 பேர் வசித்து வருகிறோம். இதில் குறிப்பாக எங்களது பெற்றோர்கள் கடந்த 1990-ம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழகம் வந்தபோது அங்கிருந்து மாவட்ட நிர்வாகம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 6 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு தற்போது நிரந்தரமாக இங்கு வசித்து வருகிறோம்.

மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் குடும்ப வாரியாக குறித்து குடும்ப அட்டை வழங்க வேண்டும். அதேபோல் தனித்தனியே குடும்ப வாரியாக வசிப்பதற்கு வீடுகள் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மறு வாழ்வுத்துறை கண்காணிப்பு அலுவலர் அன்பு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமபிரதீபன், மாவட்ட மறுவாழ்வுத்துறை தனி வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் அவர் இலங்கை தமிழர்கள் வசித்து வரும் சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் முகாமிற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மேலும் செய்திகள்