பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி தகராறு: கழுத்தை அறுத்து தந்தையை கொன்றவருக்கு 10 ஆண்டு ஜெயில்

பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து தந்தையை கொன்றவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-08-17 22:00 GMT
நாகர்கோவில்,

களியக்காவிளை அருகே வேங்கவிளையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவரது மகன் வினு (34), தொழிலாளி. இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். அப்போது அவர் தன்னுடைய மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் வினுவை விட்டு அவர் பிரிந்து சென்று விட் டார். இதனையடுத்து பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்ககோரி வினு, தனது தந்தை செல்வராஜிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

மேலும் அவர்களுக்கிடையே இதுதொடர்பாக அவ்வப்போது தகராறும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 24-5-2017 அன்று குடி போதையில் வீட்டுக்கு வந்த வினு, மனைவியை சேர்த்து வைக்கக்கோரி மீண்டும் செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த வினு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, திடீரென செல்வராஜின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.

10 ஆண்டு ஜெயில்

இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து வினுவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோமதிநாயகம் நேற்று தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில், குற்றவாளியான வினுவுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஞானசேகர் ஆஜரானார்.

மேலும் செய்திகள்