ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் புனரமைக்கும் பணி

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கீழப்பழூரில் உள்ள சிறுபாசன ஏரிகள், குட்டைகளில் புனரமைக்கும் பணியை அரசு தலைமைக்கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-17 23:00 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்பழூரில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கருங்குளம் சிறுபாசன ஏரியை ஆழப்படுத்தி புதுப்பிக்கும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்- அமைச்சரால் கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி சட்டமன்றத்தில் விதி எண்-110-ன் கீழ் ஊரக பகுதிகளில் ஊராட்சிகள் தோறும் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊரணிகள் போன்ற நீர் நிலைகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பொருட்டு, தூர் அவற்றினை வாரி புனரமைக்க உத்தரவிட்டார். அதன்படி அரியலூர் மாவட்டத்திற்கு 2019-20-ம் ஆண்டிற்கு சிறுபாசன ஏரிகள் 106-ம், குட்டை- ஊரணிகள் 872-ம் தூர்வாரி புனரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுபாசன ஏரி புனரமைக்கும் பணிக்கு ஒவ்வொரு சிறுபாசன ஏரிகளுக்கும் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், குட்டை- ஊரணிகள் புனரமைப்பு பணிக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு...

தற்போது கீழப்பழூர் ஊராட்சி கருங்குளம் சிறுபாசன ஏரியை ஆழப்படுத்தி புதுப்பிக்கும் பணி இன்று (அதாவது நேற்று) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் வரும் ஏரிகள், குட்டைகள் தூர்வாரி புனரமைக்கப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.2 கோடியே 46 லட்சம் மதிப்பில் 12 ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்கள் முதல்- அமைச்சரின் குடிமராமத்துத் திட்டப்பணிகளின் கீழ் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவுறும் தருவாயில் உள்ளது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் முன்னிலை வகித்தார். இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வடிவழகன், கூட்டுறவு சங்க தலைவர் தவமணி, முன்னாள் தொகுதி செயலாளர் சேட்டு ராஜேந்திரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், ஆவின் துணைத்தலைவர் பிச்சமுத்து, செயற்பொறியாளர் பிரேமாவதி, உதவி இயக்குனர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்